top of page
  • Facebook
  • Twitter
  • Instagram

ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ !!

பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்

இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை உயிர் அளிப்பான்

எந் நின்ற யோனியும் மாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா

மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே.

கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்ற இம்முன்று வேதாந்தப் பதத்தில், இராமானுஜருக்கு உவப்பானது பக்தி யோகமாகும். அவர் இயற்றருளிய பாஷ்யங்களில் பக்தி யோக மரபுக் குறித்து அவர் விதந்தோதியதை நம் ஆச்சாரியர்கள், உபய வேதாந்திகள் சொல்லக் கேட்டுருப்போம். இத்தகைய பக்தி மரபு காலந்தோறும் பலவிதங்களில், பலமுறைகளில் பயின்றுவந்திருக்கிறது. எம்பெருமானாருக்கு முன்னால் ஆழ்வார்களாலும், பின்னால் அவர்தம் அடியவர்களாம் பாகவதோத்தமர்கள் வாயிலாகவும் செழித்துப் பண்பட்டு வளர்ந்திருக்கின்றது. இத்தகைய பக்தி மரபின் முக்கியத்துவம் வாய்ந்தத் தொடர்ச்சிகளில் ஒன்று பஜனை கோயில்கள்.  

 

பஜனை கோயில்கள் நாடெங்கும் பரவலாக அறியப்பட்டாலும் - வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகள் உள்ளடக்கிய தொண்டை மண்டலம் - இப்பக்தி மரபை உயிர்ப்புடன் தன்னகத்தே கொண்டுள்ளது. கிராமம், நகரம் என அங்கெங்கெனாதபடி சின்னஞ்சிறுக் கோவில்களாக இப்பகுதி முழுவதும் விரவியிருக்கிறது. இதன் முக்கியத்துவத்தைச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால், உலகப் புகழ் பெற்ற காஞ்சி கருடசேவையின் போது எண்ணற்ற பஜனை குழுக்கள் தன்னெழுச்சியாகவும் சாரி சாரியாகவும் ‘கூடியிருந்து குளிர்வித்து’ கலைந்துசெல்வதைப் பார்க்கலாம். இத்துணை குழுக்கள் தாமாகவே அணியமாகி தன்னை மறந்து பஜித்து விட்டுத் தாமாகவே பிரிந்து செல்வது வேறு எந்த ஷேத்திரத்திலும் அநேகமாக இல்லை. “ஏதமில் தண்ணுமை ஏக்கம் மத்தளி, யாழ் குழல் முழவோடிசை திசை கெழுமி கீதங்கள் பாடினர்” என்ற ஆழ்வாரின் சொல்லுக்கேற்ப அத்தனை பாகவதர்களும் அவர்தம் பஜனை கோஷ்டியினருடன் ஏனைய மக்களையும் இணைத்துக் கொண்டு அருளாளப் பெருமாளோடு சங்கமிக்கிறார்கள். தேவலோக கின்னரர்கள் இறங்கி வந்திசைப்பதைப் போல் அத்திருநாளில் பக்திரசம் பெருக்கெடுக்கச் செய்கின்றனர். பக்தி இயக்க மரபின் முக்கிய அச்சாரமாக பஜனை கோஷ்டியினர் விளங்குகின்றனர்.

 

அத்தோடு நாலாயிர திவ்யப் பாசுரங்களை மெட்டமைத்துப் பாடும் மரபும் இங்கே மிகவும் பிரசித்தம். "எண்ணில் சோர்விலற்தாதி யாயிரத்துள் இவையுமோர் பத்திசையோடும் பண்ணில் பாட வல்லாரவர் கேசவன் தமரே” - என்று நம்மாழ்வார் கூற்றுக்கிணங்க பாசுரங்கள் ஒவ்வொன்றையும் ‘பண்’ணமைத்துப் பாடப்பெற்றக் காலம் ஒன்றிருந்தது. இப்போதும் அம்மெட்டுக்கள் நாட்டுப்புறத்தன்மையோடு செவிவழியாக பஜனை கோயில்களில் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருகிறது. கர்னாடக சங்கீத வித்வான் நைனா பிள்ளை, எம்.வி.வேங்கட வரதன் போன்ற மேதைகள் செவ்வியல் தன்மையோடு இசையமைத்தப் பாசுரங்களும் இங்கே பாடப்பெறுகிறது. ‘சந்த' விருத்தமாக பாசுரம் செய்வித்த திருமழி(இ)சை ஆழ்வார், பாணர் குலத்தில் பிறந்த திருப்பாணாழ்வார் மட்டுமல்லாது ஏனைய ஆழ்வார்களின் பாசுரங்களிலும் தமிழ்ப் பண்கள் பாவிசையாகப் பொதிந்து இருக்கிறது. பழங்கால பாணர் மரபின் தொடர்ச்சியாகவும் பக்தி மரபின் நீட்சியாகவும் பஜனை கோவில் மரபை வரலாற்றுப் பூர்வமாக நிறுவலாம்.

 

பாண்டவ பெருமாள் கோயில் வடவண்டை மாட வீதியில் “அருள்மிகு ஸத்யபாமா ருக்மிணி சமேத ஶ்ரீவேணுகோபால ஸ்வாமி பஜனை கோயில்” மேற்படியான முக்கியத்துவத்தோடு அமையப்பெற்று விளங்குகிறது. பெருமாள் ஐந்து நிலைகளிலே உறைகிறார் - பரம், வியூஹம், விபவம், அந்தர்யாமம் மற்றும் அர்ச்சை. நம் பக்தி மனதில் அந்தர்யாமியாய் குடிகொண்டுருக்கும் பெருமாள், இங்கே அர்ச்சை நிலையில் ஶ்ரீவேணுகோபால் ஸ்வாமியாக எழுந்தருளி இங்கே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக ஒரு கோயிலைப் பற்றி சொல்லும்போது, ஒன்று அது அரசனால் போற்றி பாதுகாக்கப்பட்டது என்றோ அல்லது புராண இதிகாசக் குறிப்புகளையோ அல்லது பழங்கால வருடத்தையோ மேற்கோள் காண்பிக்கப்படும். இக்கோவிலைப் பற்றி சொல்வதானால் வரலாற்றின் அசைவுகளோடு கட்டியமைக்கப்பட்ட பண்பாடும், எளிய மனிதர்களிடம் அப்பண்பாடு கொண்டு சேர்த்த அப்பழுக்கில்லாத பக்தியையும், அவற்றின் நெடிய மரபையும் தான் சொல்ல வேண்டும். இக்கோவிலுக்கு ஆண்டுக் கணக்குகள் கைவசம் இல்லை. ஆனால் பெரியாழ்வார் சொல்லியதுப் போல் “எந்தை தந்தை தந்தை தந்தைத்தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்” என்றார்போலே தலைமுறைகளைக் கடந்து ஶ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு நித்யபடி கைங்கர்யங்களை கிரமப்படி செய்வதோடல்லாமல், பன்னெடுங்காலமாக தொடரும் பக்தி இயக்க மரபையும் போற்றி பாதுகாத்து வருகிறோம்.

 

இக்கோயில் தற்போது மிகவும் பழுதடைந்துள்ளாதல், இவ்வாலயத்தை புதுப்பிக்கும் பொருட்டு தற்காலச் சூழலுக்கேற்ப புதுப்பொலிவுடனும் உற்சவ வழிபாட்டு வசதிகளுக்கேற்ப மறு கட்டுமானம் செய்து குடமுழுக்கு செய்ய உத்தேசித்துள்ளோம். இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவிகளை பெருவாரியாக வழங்கி ஶ்ரீவேணுகோபால ஸ்வாமியின் அருளைப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

 

“மணிமாடக் கோயில் வணங்கென் மணனே” என்று மங்கை மன்னன் கூறியதை போலவும் “வன்பெரு வானகம் உய்ய, அமரர் உய்ய, மண் உய்ய, மண்ணுலகில் மனுசர் உய்ய, துன்பமிகு துயர் அகல, அயர்வொன்று இல்லாச் சுகம் வளர, அகம் மகிழும் தொண்டர் வாழ, தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும் இசைந்துடனே என்றுகொலோ இருக்கும் நாளே” என்று குலசேகர ஆழ்வார் ஆசையோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்ததைப் போலவும் இக்கோவிலைப் புதுப்பித்து வேணுகோபாலனைப் பெருங்குழுவுடன் கண்டு இசைந்து களிக்கும் நாளை நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறோம்.                                      

                                                                                                                                                                                       இங்ஙனம்  

                                                      கோயில் திருப்பணிக் குழு & நிர்வாகம்

Indian Bank:
Account No: 411597555
IFSC Code: IDIB000S085

GPAY: 93643 22342 / 93603 03133
UPI ID: 9789281876@indianbk

இவ்வாலயத்தை புதுப்பிக்கும் பொருட்டு தற்காலச் சூழலுக்கேற்ப புதுப்பொலிவுடனும் உற்சவ வழிபாட்டு வசதிகளுக்கேற்ப மறு கட்டுமானம் செய்து குடமுழுக்கு செய்ய உத்தேசித்துள்ளோம். இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற நிதி மற்றும் பொருள் உதவிகளை பெருவாரியாக வழங்கி ஶ்ரீவேணுகோபால ஸ்வாமியின் அருளைப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Screenshot 2025-03-31 at 6.00_edited.png

© 2025 by ஶ்ரீ வேணுகோபால ஸ்வாமி பஜனை கோவில்.

bottom of page